வெள்ளி, 1 ஜனவரி, 2010

திருவாதிரை உற்சவம் 01 ஜனவரி 2010




" மார்கழித் திங்கள் மதி நிறை நாளில் திருவாதிரை நட்சத்திரம் கூடி வ்ரும் நாள் ஆருத்ரா தரிசனத்திற்குரிய நாள் ஆகும். இந் நாளில் சிவபெருமான் பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்களுக்கு ஆனந்தத் திருக்கூத்து ஆடிக் காட்டினார்.

சிவபெருமானின் நடனம் அவன் புரியும் ஐந்தொழில்களை விளக்குகின்றது. அவன் அசைவால் உலகங்கள் அசைகின்றன. அணுவின் உட்கூறுகளை அசைவிக்கும் இறைவன் அண்டங்களையும் அசைக்கின்றான். அசையும் அனைத்தும் இறைவனின் ஆற்றலால் அசைகின்றன.

சிவபெருமான் ஆனந்தக்கூத்தனாக ஆடும்வரை உலகின் அசைவுகள் தொடரும். அவன் ஆட்டம் நிற்கும்போது அனைத்தும் அடங்கி அவனுக்குள் ஒடுங்கும். மீண்டும் அவன் ஆட்டம் தொடங்க்கும் போது உலகங்கள் படைக்கப்படும்.

ஆதிரை நட்சத்திரத்தில் இறைவன் ஆடிக் காட்டியதால் சிவன் ஆதிரையான் என்னும் பெயர் பெற்றான். ஆதிரை நட்சத்திரக் கூட்டத்தை கூர்ந்து கவனித்தால் அவற்றின் அமைப்பு சிவபெருமான் ஆனந்தக் கூத்து ஆடும் காட்சியை ஒத்திருப்பதைக் காணலாம்.

இறைவன் ஐந்தொழில் ஆற்றும் பொருட்டுச் சொரூப நிலையிலிருந்து தடத்த நிலைக்கு வந்த நாள் இதுவென்பதால் இறைவனின் இந்த ஆட்டம் என்று தொடங்கியது என்று கூற முடியாது. சிவன்டியார்களுக்குக் காட்டிய அன்று இக்கூத்து தொடங்கியதாகக் கருதக்கூடாது.

தமிழ் நாட்டில் சிதம்பரம், திருவுத்தரகோசமங்கை போன்ற ஊர்களில் இந்த விழா பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது." = சித்தாந்த சைவம் எனும் நூலில் முனைவர் நாகப்பன் ஆறுமுகம்.








1 கருத்து: